என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று அன்றே ஆங்கிலேயனின்; ஆட்சி கண்டு பொங்கி எழுந்த பாரதி, ஈழத் தமிழன் சிங்களவனின் கோரக் கொலைக்கு துணை நிற்கும் இன்றைய பாரதத்தின் கோணல் புத்தி கண்டும் சும்மா இருப்பானா? சிந்து நதியினிலே சேர நாட்டு இளம் பெண்களுடன் சுந்தரத் தமிழில் பாட்டிசைத்துத் தோணிகள் ஓட்டி மகிழ்வானா? அல்லது பொங்கி எழுந்து ஒரு போர்க் கொடி ஏந்தி எந்த நாயடா என் தமிழ் மக்களை நிந்தை செய்து நீள் பலி கொள்பவன் என்று புதிய போர்ப் பரணி பாடுவானா? அல்லது இன்று இந்த நிலை கண்டு சிந்தை நொந்து சீரழிந்து மடிவானா?
ஈழத்தில் தமிழன் எனப் பிறந்தாலே அழிவுதான் என ஆணையிடும் அரசுக்கு ஏவல் புரியும் அடிமையாய் மாறிவிட்ட உனக்கு, கொடி எதற்கு? படை எதற்கு? ஆள் அம்பு சேனை அத்தனையும் ஏன்?
கொலை வாளினை எடடா அந்தக் கொடியோர் தலை அறவே எனப் பாடிய பாரதிதாசன், தமிழன் தலை கொய்திடும் சிங்களவனின் செயலுக்குப் பாரதமும் தமிழகமும் பலம் செய்து நிற்கும் ஈனச் செயல் கண்டும் இங்கு அவன் சும்மா இருப்பானோ? ஈழத் தமிழனின் தன்மான உணர்வு கண்டு தமிழன் நீயே! தன்மானமும் உன்னதே! ஈனமாய் உண்டு இங்கு உலகுக்குப் பாரமாய், ஊளைச் சதை வளர்க்கும் கூட்டமல்ல நாம் என்று தானைப் படை நடத்தி தானெழுந்து வருவாரே. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என ஈழத் தமிழர் துயர் தீர்த்து வைப்பாரே!
ஏட்டிலும் பாட்டிலும் அவன் எடுத்த கொலை வாள் ஈழக் காட்டிலும் மேட்டிலும் ஏ.கே.47, விமான எதிர்ப்பு ஏவு கணை என இன்று ஈழத் தமிழனைக் காத்து நிற்குமே. காட்டிக் கொடுக்கும் நயவஞ்சகக் கூட்டத்தில் தமிழகம் மாட்டித் தவிக்கும் நிலை அவன் மட்டும் இருந்திருந்தால் ஈழத் தமிழனுக்கு இந்த அவலநிலை வருமா?
ஆரிய மாயையில் இருந்து மீள வைத்தவர் திராவிடப் பகுத்தறிவு இயக்கத்தின் தந்தை பெரியார். தமிழனுக்குத் தன்மானம் வேண்டும் எனப் பகுத்தறிவுச் சாட்டை வீசிப் பட்டை தீட்டி ஒளி ஏற்றிய ஈ.வெ.ரா. இன்றிருந்தால், இந்து ராம், துக்ளக் சோ, மணி சங்கர ஐயர், எம்.கே.நாராயணன், சுப்பிரமணியசுவாமி, ஜெயலலிதா கூட்டம் அடிக்கும் கொட்டம் இங்கு பலிக்குமா? திராவிடக் கழகத்தின் ஆட்சியில் ஈழத் தமிழர் துயர் இந்த நிலை காணுமா?
வந்தாரை வாழவைத்த தமிழகமே சொந்த நாட்டானையே சுரண்டி வாழும் சிலந்திக் கூடாக எப்போது மாறினாய்? உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள்! வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது என அடுக்கு மொழியில் அரசியல் வெற்றி கண்ட அறிஞர் அண்ணா இன்றிருந்தால், அருமைத் தம்பியின் அரசியல் அடிமைத் தனம் கண்டு பெருமையா கொள்வார்? தேசியம் பேசித் திராவிட நாட்டுக் கோரிக்கையை கைவிட்ட அண்ணா ஈழத் தமிழரின் இன்றைய அவலம் கண்டு தனித் தமிழீழம் இன்றேல் தனியான தமிழகம் வேண்டும் எனச் சினந்தெழுந்து நில்லாரோ? தமிழீழ மக்களுக்கு துணையாகத் தமிழகத்தை தட்டி எழுப்பிச் சிங்களத்தின் கொட்டத்தை அடக்கி விடுவாரே!
சோனியாவின் சொல்லுக்கும், பிரணாப் முகர்ஜியின் ஆணைக்கும் மன்மோகன் சிங்கின் ஆசிக்கும் கட்டுப் பட்டு ஈழத் தமிழினத்தைச் சிங்களம் அடிமை செய்ய வாளா இருக்கும் வன்ம மனமா அண்ணாவுக்கு? அவரது இதயக் கனியாம் எம்.ஜீ.ஆரின் இதயக் கனவு அல்லவோ தமிழீழத் தாயகம்? அவர் வழியில் வந்த ஆந்திரா அழியால் அழுக்காகி நிற்கிறதே தமிழர் மானம்.
ருஷியப் புரட்சியின் தந்தை ஸ்டாலினைத் தன் அருமை ஆசை மகனுக்குச் சூட்டி மகிழ்ந்த அன்றைய கருணாநிதி மட்டும் இன்று உயிரோடிருந்தால் ஈழத் தமிழரின் வீர விளக்காய் விளங்கும் தானைத் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆரத்தழுவி புறநானூற்று வீரன் நீயே எனக் கூறி மகிழ்வாரே? காலன் செய்த கொடுமையால் இன்று பிரபாகரன் சர்வாதிகாரி எனக் காழ்ப்புணர்வில் காறி உமிழும் கயவமையை அன்றோ காண்கிறது உலகத் தமிழினம்? அன்றைய கருணாநிதி எங்கே எங்கே எனத் தேடுகிறது தமிழ் கூறும் நல்லுலகம்.
சென்னை வீதியிலே சிலையாய் நிற்கும் கற்பின் உருவாம் கண்ணகி தன் செவ்விழி திறந்தால், தேரா மன்னா? கேளொரு சேதி! ஈழத் தமிழரில் என்ன குற்றம் கண்டாய்? மதுரை எரிக்கையிலும் மறையோர் மங்கையர் மாதிறத்தோர் எரிதழல் எரிக்காது ஆணையிட்டு அக்கினியைப் பணித்தேன். ஆனால் ஈழத்தில் தமிழன் எனப் பிறந்தாலே அழிவுதான் என ஆணையிடும் அரசுக்கு ஏவல் புரியும் அடிமையாய் மாறிவிட்ட உனக்கு, கொடி எதற்கு? படை எதற்கு? ஆள் அம்பு சேனை அத்தனையும் ஏன்?
கோழையின் கையிலே வீர வாள் எதற்கு? சிலையாக நிற்கும் கல் என்று என்னை எண்ணாதே! சினந்து நான் எழுந்தால் அறம் கொல்லும் அத்தனை சொத்துச் சுகங்களையும். பூத உடல் வேண்டுமா? புகழ் உடம்பு வேண்டுமா? தெரிவு மட்டுமே உனக்கு. முடிவை நான் எழுதுவேன். மாதர் கற்பு காலத்தால் கரையாதது. காலானாய்க் கனன்று எரிப்பது. அன்று மதுரை மட்டுமே எரிந்தது. மாதரின் கற்பு எரியவில்லை. அன்றும் இன்றும் என்றும் தான் எரியாது அனைத்தையும் எரிக்கும் ஆற்றல் கொண்டது. அன்ற எழுந்த தீ இன்றும் எரிவதை நினைத்துப் பார்.
- - -
பின்னூட்டங்கள் (1)
...
இந்தப் போராட்டத்திற்கும் எனக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இந்தி எதிர்ப்புப் போரை காட்டிக் கொடுத்தும் சிறை செய்து பாளையங்கோட்டையில் அடைத்த பக்தவச்சலத்திற்கு புதைமேடை கட்டித்தந்த கருணாநிதிதான் இன்று இருக்கிறார். அன்று முதல் இன்று வரை அவர் அப்படியேதான் இருக்கிறார். பெயர் சூட்டுவதில் இல்லை பெருமை. செயலில் உள்ளது. அரக்கப்படைக்கு அமைதிப் படை என்று பெயர் சூட்டியதால் இராசீவ்காந்தி நல்லவனாகி விடுவானோ?




.jpg)












