2002 இல் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பெயரளவில் மறுதலிக்கப்படாது 5 வருடங்கள் நிறைவேறியுள்ளன. பெயளரவில் இந்த ஒப்பந்தம் இரு பகுதியினராலும் உத்தியோக பூர்வமாக மறுதலிக்கப்படவில்லையெனினும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே பேசப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படவில்லை யென்பதும் நடைமுறைப்படுத்தப்படாது போய்விட்டன என்பதும் அறியப்பட்ட உண்மைகளாகும்.

இவ் ஒப்பந்தம் பற்றிய மிகப் பிரதானமான அம்சம் அது ஏறத்தாழ ஒன்றுக்கொன்று முரணான 3 அரசாங்கங்களினால் `கையாளப்பட்டமை'யேயாகும்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செய்தது யூ.என்.பீ. அரசாங்கம். அப்போதைய ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே அது கைச்சாத்திடப்பட்டது. 2004 இல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது அதிகாரத்தை பாராளுமன்றத்தில் நிறுவிய பொழுது சர்வதேச தேவைகளுக்காகவே இந்த ஒப்பந்தத்தை உத்தியோக பூர்வமாக மறுதலிக்காதுவிட்டார். 2006 நவம்பர் முதல் ஆட்சிக்கு வந்த புதிய ஜனாதிபதி சிங்களத்துக் கட்சிகளின் ஆதரவுப் பின்புலத்திலேயே தனது ஆட்சியை நிறுவினார். ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் வட, கிழக்கு சம்பந்தமாக பாரதூரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

முதலாவது, படுவான்கரை தவிர்ந்த கிழக்குப் பிராந்தியத்திலிருந்து புலிகள் ஒதுக்கப்பட்டமையாகும். இந்தச் செயல் மூலம் வடக்கு - கிழக்குப் பிரச்சினையென்பது இப்பொழுது வடக்குப் பிரச்சினையாக மாத்திரமேயுள்ளது. வடக்கின் மைய நிலையமாக யாழ்ப்பாணத்தை விடுத்து வவுனியாவை ஏற்படுத்தியமையும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.

இரண்டாவது, நேரடியான படைநிலை தாக்குதல்களை வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொண்டுள்ளமையாகும். இவ்விடயத்தில் வடக்கில் படைநடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முறைக்கும் கிழக்கில் மேற்கொண்டுள்ள முறைமைக்கும் இடையே பலத்த வேறுபாடுகள் உண்டு.

இந்த இரண்டு அம்சங்களையும் தென்னிலங்கையின் ஒரு மிக மிக முக்கியமான அரசியற் பின்புலத்திலே வைத்து நோக்குதல் அவசியமாகும். அந்த அம்சம் கடந்த சில வருடங்களாக சிங்கள மக்களிடையே குறிப்பாக ஊடகங்கள் மூலமாக சிங்களத்துவ இன மேலாண்மையுணர்வு வளர்த்துவரப்பட்டுள்ளமையாகும். இனத்துவ உணர்வு முன்வைக்கப்பட்டு அதன் கண்ணோட்டத்திலேயே இலங்கையின் அரசியலைப் பார்க்கும் முறைமை ஸ்திரமாகியுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் பிரிக்கப்பட முடியாத இறைமை பற்றிய ஓர் அசாதாரண அரசியல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசியல் அழுத்தம் ஒற்றையாட்சியையும் ஏக நிர்வாகத்தையும் வலியுறுத்துவதன் மூலம் சமஷ்ரி முறைமை போன்வற்றை முற்றிலும் நிராகரிக்கின்றது.

மேலே கூறிய கருத்துகள் பிரக்ஞை பூர்வமாக வளர்க்கப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகளும் குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரனும் மிக மோசமான முறையிலே சித்தரிக்கப்பட்டும் வர்ணிக்கப்பட்டும் வருவதைக் காணலாம். பிரிவினைவாதிகள் (பெதும் வாதின்) என்ற பேச்சு கைவிடப்பட்டு பயங்கரவாதிகள் (திரஸ்த வாதின்) என்ற தொடரே பயன்படுத்தப்படுகின்றது. உண்மையில் பல்வேறு வானொலிகளிலும் திரஸ்த வாதிகள் என்று சொல்லும் பொழுது ஆழமான காழ்ப்புணர்ச்சியிருப்பது நன்கு புலப்படும்.

உண்மையில் தொடக்கத்தில் நிர்வாக அலகு என்னும் வகையில் அரசாங்கம் இந்தக் கோசத்தை முன்வைக்கவில்லை. ஊடகங்களே இதனை முன்னிலைப்படுத்தின. 2002 - 2007 காலகட்டத்தின் மிக முக்கியமான வெளிப்பாடுகளிலொன்று படையினர் தமது பணிபற்றிக் கொண்டுள்ள `தேசாபிமான' நோக்காகும். இந்த விடயத்தில் புதிய ஜனாதிபதியின் படைத்துறை நியமனங்கள் இந்த உணர்ச்சி வளர்ச்சிக்கு இடமளித்தன.

`பயங்கரவாத ஒழிப்பு' இன்று படையினரின் மிக முக்கியமான பிரகடனப்படுத்தப்பட்ட நோக்காகவுள்ளது. இந்த வளர்ச்சிகள் இனப்பிரச்சினைக்கான அரசியற் தீர்வு சம்மந்தமாக மிகவும் ஓர் இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள ஊடகங்களிலே தீர்வு பற்றிப் பேசும் பொழுது இரண்டு விடயங்களை முக்கியப்படுத்துகின்றார்கள். ஒன்று `பயங்கரவாதத்தை தோற்கடித்தல்' இரண்டு, இது புதியதொரு குரல் - அதாவது விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்பதாகும்.

தமிழ் மக்களுக்கு சிங்கள மக்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய உபகாரம் அதுவே என்கிற தோறணையிலேயே இந்த வாதம் முன்வைக்கப்படுகின்றது.

அரசியற் தீர்வென ஒன்றை முன்வைப்பதன் முன்னர் தமிழ் மக்களுக்கு ஒரு ஜனநாயக மீட்பு வழங்கப்பட வேண்டுமென ஹெல உறுமய வாதாடுகின்றது.

இத்தகைய சிந்தனைப் போக்குகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ்க் குழுக்களுக்குப் பெருத்த அசௌகரியத்தையும் இடர்பாட்டையும் ஏற்படுத்துவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர். சிங்கள இனத்துவவாதத்தின் சுய கணிப்பு உணர்வு இப்பொழுது ஒரு புதிய கட்டத்தை எய்தியுள்ளது. அதன்படி புலிகள் ஆயுதங்களை கைவிட்டதன் பின்னரே பேச்சுவார்த்தைக்கு இணங்க வேண்டும் என்ற நிலைப்பாடு மேலோங்கியுள்ளது. ஜனாதிபதியும் இத்தகைய ஒரு நிலைப்பாட்டையே வற்புறுத்தியுள்ளார். இவையாவற்றுக்கும் மேலாக இன்று சிங்கள மக்களிடையே மிக்க வலுவுடன் பரப்பப்பட்டுள்ள கருத்து புலிகள் பின்வாங்கத் தொடங்கிவிட்டனர் என்பதாகும்.

2007 பெப்ரவரி 22 ஆம் திகதி தென்னிலங்கையின் அரசியல் மனோநிலை இதுதான். இதனை சரிவர புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இந்தப் பின் புலத்திலேயே விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை நோக்குதல் வேண்டும்.

சர்வதேச நாடுகளைப் பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் தம்மீது குத்தப்பட்டுள்ள பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டு தாம் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கான முன்னணிசக்தி என்பதை மீள வலியுறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அனுதாபம் காட்டாத சர்வதேச பிராந்திய ஊடகச் சூழலினூடே இதனை செயல் சாத்தியமாக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கெரில்லா முறைமையையோ அல்லது வரன்முறையான படைநிலைத் தாக்குதல்களையோ மேற்கொள்வதில் தயக்கம் காட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை மறுபுறத்தில் இலங்கையின் தமிழ் அடையாளத்தை வற்புறுத்தும் அரசியல் உணர்வு தமிழ்த் தேசியமாக முன்னிலைப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான வளர்ச்சியெனலாம்.

ஆனால் தமிழ்ப் பகுதிகளில் இந்த அரசியல் மயப்பாடு இன்னும் சரிவர கீழிறங்கவில்லை என்ற யதார்த்தத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. இதன் காரணமாக தமிழ்ப் பிரதேச அரசியலில் ஒரு பாரதூரமான குறைபாடு ஏற்பட்டுள்ளது. வட கிழக்கு தமிழ் மக்கள் தங்கள் அரசியற் குறைபாடுகளை தாங்களே எடுத்துக் கூறும் நிலைக்கு இன்னும் வரவில்லை.

கிழக்கில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றி அப்பிரதேசத்தின் குரல் இன்னமும் ஒலிக்கவில்லையென்பது ஒதுக்கப்பட்டிருக்கும் உண்மையாகும்.உண்மையில் இக் கட்டத்திலே தான் தென்னிலங்கையில் சிங்கள இனத்துவ உணர்ச்சி வளர்ப்புக்காரணமாக சிங்கள சமூகத்துக்குள்ளேயே ஏற்பட்டுள்ள ஒரு முற்போக்குவாத எழுச்சியினை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது. தென்னிலங்கையின் மரபு வழிசாரா மார்க்ஷியவாதிகள் பலர் தமிழர்களின் உரிமைகள் பற்றிக் குறிப்பாக சுயநிர்ணயம் பற்றி வற்புறுத்தத் தொடங்கியுள்ளனர். சிறிதுங்க ஜயசூரிய, விக்கிரபாகு கருணாரட்ன போன்ற அரசியல் வாதிகளும் சுச்சரித்த கமலத் போன்ற புலமையாளர்களும் சிங்கள மக்களிடையே தெட்டத் தெளிவாக தமிழர் உரிமை பற்றிப் பேசுகின்றனர். இந்தப் பின் புலத்தில் பார்க்கும் பொழுது தமிழ்ப் புத்திஜீவிகளின் மௌனம் சற்று அதிர வைக்கின்றது என்றே கூற வேண்டும். இந்தப் பின்புலத்திலேயே யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தொகையை சரி பார்க்க வேண்டியுள்ளது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம், அது வன்முறையான ஒரு அரசும் அந்த அந்தஸ்தைப் பெறாத ஒரு விடுதலை இயக்கமும் அந்த நாட்டின் ஒரு சௌஜன்யம் குறித்து செய்த ஒரு ஒப்பந்தமாகும். விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என திட்டவட்டமாகக் கூறும் அரசாங்கம் அவர்களுடன் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உலகறிய கிழித்தெறிய முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதற்கான காரணம் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கான ஆத்மார்த்த வலுவேயாகும்.  

                                                                                                                                                           -  பீஷ்மர்-

பின்னூட்டங்கள் (0)

Subscribe to this comment's feed

சிறிது | பெரிது

busy
 
கட்டுரைகள்