என்பது பற்றி பார்த்தால், இந்த ஒட்டு மொத்த சமர்களின் பரிமாணத்தை ஓரளவுக்காவது விளங்கிக் கொள்ள முடியும்.வன்னியின் மேற்குச் சமர் அரங்கில் இப்போது இலங்கை இராணுவத்தின் 5 டிவிசன்கள் நிலைகொண்டிருக்கின்றன. இவற்றில் இரண்டு தற்காப்பு டிவிசன்கள் அல்லது அரைத்தாக்குதல் டிவிசன்கள் ஆகும்.
இனிமேலும் விட்டுக் கொடுக்க முடியாத எல்லைக்குள் புலிகள்; பின் தள்ளப்பட்டு விட்டனர் என்பதில் சந்கேம் இல்லை. இந்தநிலையில் அடுத்து என்ன நிகழும் !
ஓமந்தை மற்றும் அதையண்டிய பகுதிகளில் நிலைகொண்டடிருப்பது 56 ஆவது டிவிசன். மேஜர் ஜெனரல் ஜெகத் ரம்புக்பொத்த தலைமையிலான இந்த டிவிசனின் ஒரு பகுதித் துருப்புக்கள் மட்டுமே வன்னியின் மேற்குச் சமர்முனையில் நிலை கொண்டிருக்கின்றன. எஞ்சியவை ஓமந்தைக்குக் கிழக்கே முன்னரங்க நிலைகளினது பாதுகாப்பில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.
அடுத்து- அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மடுவை அண்டிய பிரதேசங்களில், புதிதாக உருவாக்கப்பட்ட தற்காப்பு அல்லது அரைத் தாக்குதல் டிவிசனான 61 ஆவது டிவிசன் நிலைகொண்டிருக்கிறது. மேஜர் ஜெனரல் லலித் தவுலகல தலைமையிலான இந்த டிவிசனில் இரண்டு பிரிகேட்கள் மட்டுமே இப்போதைக்கு இணைத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
இவையிரண்டுமே இப்போதைய வன்னிச் சமர்களில் புலிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு, நெருக்கடிகளைக் கொடுக்கின்ற நிலையில் இல்லாத படைப்பிரிவுகளாகும். கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைத்துக் கொள்வதற்கு அப்பால் இவை வேறெந்த வம்புக்கும் செல்வதில்லை.
இவற்றைத் தவிர 57, 58, 61 ஆகிய மூன்று டிவிசன்கள் தான் இப்போது பிரதானமாக புலிகளுக்கு எதிரான சமர்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்று டிவிசன்களிலும் மொத்தமாக 18,000 தொடக்கம் 20,000 வரையான துருப்புக்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் பிரிகேடியர் சவீந்திர டி சில்வா தலைமையிலான கொமாண்டோ பிரிகேட்டின் இரண்டு பற்றாலியன்கள், பிரிகேடியர் நிர்மல் தர்மரட்ண தலைமையிலான விசேட படைப்பிரிவின் இரண்டு ஸ்குவாட்ரன்கள் என்பனவும் முன்னரங்கப் பிரதேசத்தில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றன.
முதலில் 57 ஆவது டிவிசன் பற்றிப் பார்க்கலாம். கடந்த ஆண்டில் வன்னிப் படைநடவடிக்கைகளுக்கென்றே உருவாக்கப்பட்ட இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவு இது. மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் இதன் பொதுக் கட்டளை அதிகாரி. 1983 இல் கொக்காவிலில் நிலைகொண்டிருந்த இராணுவ பிளட்டூன் ஒன்றின் கொமாண்டராகவும், பின்னர் 1990 இல் கிளிநொச்சியிலும் இவர் பணியாற்றியிருக்கிறாhர்.
இப்போது கொக்காவில், கிளிநொச்சி நோக்கிய பிரதான நகர்வுகளை இவரே நெறிப்படுத்துகிறார். மடுப் பெரும்பாகப் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின்னர் பெரியமடு, பள்ளமடு நோக்கிய நகர்வுகளிலும்- அடுத்து சிராட்டிக்குளம், கல்விளான், வவுனிக்குளம், துணுக்காய், மல்லாவி, வன்னிவிளாங்குளம், என்று முன்னேறிய இந்த டிவிசன் தான் இப்போது கிளிநொச்சி, கொக்காவில், மாங்குளம் போன்ற ஏ-9 வீதியின் முக்கிய நகரங்களைக் குறிவைத்திருக்கிறது.
விடுதலைப் புலிகளுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்கின்ற படைப்பிரிவாக இதையே கருதலாம். இந்த டிவிசனில் இதுவரையில் 3 பிரிகேட்கள் இயங்கி வந்தன. ஆனால் தற்போது மேலதிகமாக ஒரு பிரிகேட் சேர்க்கப்பட்டு நான்காக அதிகரிக்கப் பட்டிருக்கிறது.
இரண்டு வருடங்களாக சமரைப் புலிகள் நடத்தியிருக்கின்றனர். இந்தளவுக்கும் செலவிடப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன? அவை தொடர்ந்தும் கிடைப்பதற்கான வழிகள் உள்ளனவா?
கேணல் ரவிப்பிரிய தலைமையிலான 57-1 பிரிகேட், கேணல் சேனாரத் பண்டார (இவர் கடந்த மாத நடுப்பகுதியில் தான் லெப்.கேணல் தரத்தில் இருந்து கேணலாகப் பதவி உயர்த்தப்பட்டார்) தலைமையிலான 57-2 பிரிகேட், லெப்.கேணல் பிரதாப் திலகரட்ண தலைமையிலான 57-3 பிரிகேட் ஆகியனவே இதுவரையில் செயற்பட்டு வந்தன.
ஒக்ரோபர் 01ம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக இயங்க ஆரம்பித்திருக்கும் 57-4 பிரிகேட்டின் கட்டளை அதிகாரியாக, 11 ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின் தளபதியாக இருந்த லெப். கேணல் சேனக விஜேசூரிய நியமிக்கப் பட்டிருக்கிறார்.
அக்கராயன் குளத்துக்கு தெற்கு, மேற்குப் பகுதிகளில் 57-1 பிரிகேட்டும், அக்கராயன் குளத்துக்கு கிழக்காகவும் கொக்காவிலுக்கு வடக்கேயும் 57-2 பிரிகேட்டும், கொக்காவில் மேற்கு மற்றும் அதற்கு தெற்காக 57-4 பிரிகேட்டும், மாங்குளம் நோக்கி 57-3 ஆவது பிரிகேட்டும் இப்போது முன்னேற்ற நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
அக்கராயனுக்கு கிழக்காகவும் கொக்காவிலுக்கு வடக்காகவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்ற 57-2 பிரிகேட்டில் உள்ள லெப்.கேணல் வெலிக்கல தலைமையிலான 4 ஆவது சிங்க றெஜிமென்ட் கிளிநொச்சி நகர எல்லையில் இருந்து 2 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருப்பதாக இராணுவம் கூறுகிறது.
அதேவேளை இந்த பிரிகேட்டில் உள்ள மேஜர் சஞ்ஜய பெர்னான்டோ தலைமையிலான 3 ஆவது கஜபா றெஜிமென்ட் மற்றும், லெப். கேணல் எப்சித திசநாயக்க தலைமையிலான 8 ஆவது இலகு காலாற்படை ஆகியனவும் அக்கராயன் - திருமுறிகண்டி வீதியை மையப்படுத்தியும், கொக்காவிலுக்கும் திருமுறிகண்டிக்கும் இடைப்பட்ட ஏ-9 வீதியை இலக்கு வைத்தும் நகர்வுகளில் ஈடுபட்டுள்ளன.
அடுத்து புதிதாக ஆரம்பிக்கப் பட்டிருக்கின்ற லெப். கேணல் சேனக விஜேசூரியவின் தலைமையிலான 57-4 பிரிகேட் கொக்காவில், மற்றும் அதற்குத் தெற்காக உள்ள பகுதிகளை நோக்கிய முன்னகர்வில் ஈடுபட்டிருக்கிறது.
இதில் லெப்.கேணல் ரஞ்சித் அபேரட்ண தலைமையிலான 7 ஆவது இலகு காலாற்படை, லெப். கேணல் ஜெகத் கொடித்துவக்கு தலைமையிலான 10 ஆவது இலகு காலாற்படை, மேஜர் தம்மிக திசநாயக்க தலைமையிலான 16 ஆவது சிங்க றெஜிமென்ட் ஆகிய மூன்று பற்றாலியன்கள் ஏ-9 வீதியை நோக்கி பரவலான நகர்வில் இறங்கியிருக்கின்றன.
57-4 பிரிகேட்டில் 2500 படையினர் இருப்பதாகவும், இத்தோடு சேர்த்து மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையிலான 57 ஆவது டிவிசனின் ஆளணிப் பலம் 10,000 ஆக அதிகரித்திருப்பதாகவும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை.
அதுமட்டுமன்றி புதிதாக உருவாக்கப் பட்டிருக்கும் 57-4 பிரிகேட்டில் ஆக மொத்தம் 3 பற்றாலியன்களே இணைக்கப் பட்டிருக்கின்றன. 57-2 பிரிகேட்டில் இருந்த 7 ஆவது இலகு காலாற்படையும், கடந்த மாத இறுதிவரை அதே பிரிகேட்டில் இருந்த 10 ஆவது இலகு காலாற்படையும் இந்தக் களமுனைக்குப் புதியவை அல்ல. 1997இல் உருவாக்கப்பட்ட 16வது சிங்க றெஜிமென்ட் மட்டுமே இந்தப் போர்முனையில் புதிதாகச் சேர்க்கப்பட்டிருக்கின்ற பற்றாலியன் ஆகும்.
இலங்கை இராணுவத்தில் ஒரு பற்றாலியனில் ஆகக் கூடியது 650 படையினருக்கு மேல் இல்லை. அதுவும் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற 57-4 பிரிகேட்டில் 2000 பேர் கூட கிடையாது. அவற்றில் இரு பற்றாலியன்கள் அதே டிவிசனைச் சேர்ந்தவையாக இருக்கின்ற போது, 57 ஆவது டிவிசனில் 2500 மேலதிக படையினர் சேர்க்கப்பட்டு அதன் பலம் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதெல்லாம் பொய்ப்பிரசாரமே.
அடுத்து, வன்னிவிளாங்குளம்- மாங்குளம் பகுதிகளை நோக்கிய முன்னகர்வில் லெப்.கேணல் பிரதாப் திலகரட்ண தலைமையிலான 57-3 ஆவது பிரிகேட் ஈடுபட்டிருக்கிறது. லெப்.கேணல் கீத்சிறி லியனகே தலைமையிலான 7 ஆவது சிங்க றெஜிமென்ட், லெப். கேணல் சந்திரசோம தலைமையிலான 9 ஆவது கஜபா மற்றும் 9 ஆவது விஜயபா றெஜிமென்ட் ஆகிய பற்றாலியன்கள் இதில் உள்ளடங்கியுள்ளன.
வன்னிவிளாங்குளத்தில் இருந்து அக்கராயன் வரை- கிட்டத்தட்ட ஒரு ‘ப’ வடிவில் முன்னரங்க நிலைகளைக் கொண்டு, 57 ஆவது டிவிசன் களம் இறங்கப் பட்டிருக்கிறது. திருமுறிகண்டிக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஏ-9 வீதியை நோக்கியவாறு பக்கவாட்டு நகர்விலும் - அக்கராயன் - திருமுறிகண்டி அச்சில் நேராகவும் இது புலிகளுடன் மோதிக் கொண்டிருக்கிறது.
இந்தப் படைப்பிரிவு இப்போது பெரும் பிரதேசத்தை புலிகளின் எதிர்த்தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. புலிகள் நினைத்தால் எந்த நேரத்திலும் பக்க வாட்டிலாயினும் சரி, நெற்றிப் பொட்டிலாயினும் சரி வலிந்த தாக்குதல்களைத் தொடுக்கின்ற சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன.
மோதல்களில் அதிகளவில் சேதங்களை எதிர்கொள்வதாலும் தற்காப்பில் அதிகளவு கவனம் செலுத்த வேண்டியிருப்பதாலும் இந்த டிவிசனின் சுமை அதிகம்.
57-2 ஆவது பிரிகேட்டைச் சேர்ந்த 8 ஆவது இலகு காலாற்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் எப்சித திசநாயக்க, புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்துப் பார்த்து தூக்கமின்றி இரவைக் கழிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
57வது டிவிசனின் பிரிகேட், பற்றாலியன், கொம் பனி கொமாண்டர்கள் அனைவருமே எந்த நேரமும் தொலைத்தொடர்பு சாதனத்துடனும், பிரதேச வரைபடத்துடனும் தான் திரிகின்றனர்.
சாதாரண படையினரின் நிலையும் இதேதான். காரணம் புலிகள் கிளிநொச்சியைக் காப்பாற்றும் நோக்கில் தம் மீது பாரிய வலிந்த தாக்குதலை தொடுக்கலாம் என்று படையினர் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு, மூன்று வாரங்களில் மிகவும் தீவிரமாக அதிகரித்திருக்கிறது.
உண்மையில் படையினர் ஒரு உளவியல் போருக்குள் சிக்கிப் போயிருக்கின்றனர் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. லெப். கேணல் எப்சித திசநாயக்க, புலிகளின் தாக்குதலை எதிர்பார்த்து தூக்கமின்றி இரவுகளைக் கழிப்பதாகக் குறிப்பிட்டதானது முன்னெச்சரிக்கையாக இருப்பதை மட்டும் குறிப்பிடவில்லை.
இது அவர்களின் பயத்தின், பலவீனத்தின் வெளிப்பாடாகவும் தெரிகிறது. எந்தவொரு இராணுவமும் 24 மணிநேரமும் விழிப்புநிலை இருக்கத்தான் வேண்டும். அதையே தூக்கமின்றி இரவுகளைக் கழிப்பதாக களமுனைக் கட்டளை அதிகாரி ஒருவர் வெளிப்படையாகக் குறிப்பிடுகிறார் என்றால் அது சலிப்பின் வெளிப்பாடே.
தொடர்ச்சியான போரால் படையினர் களைத்து, சலித்து விட்டனர் என்பதே உண்மை. களமுனையில் உள்ள படையினர் ஓய்வின்றித் தவிக்கின்றனர். உடை மாற்றக் கூட அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. புதிய உணவு கூட படையினருக்கு ஒழுங்காகக் கிடைப்பதில்லை.
இது இராணுவத்தின் முதன்நிலைப் படைப்பிரிவாக இப்போது கருதப்படும் 57 ஆவது டிவிசனின் பிரதானமான பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.
அதேவேளை வடமேற்கு கரையோரத்தில் நாச்சிக்குடாவுக்குள் நுழைய முடியாதபடி புலிகளின் பலமான காப்பரண்களுக்கு முன்னால் முட்டி மோதிக் கொண்டிருக்கின்ற 58 ஆவது டிவிசனின் நிலை குறித்து இப்போது பார்க்கலாம்.
பிரிகேடியர் சவீந்திர டி சில்வா தலைமையிலான இந்த டிவிசனின் மொத்தம் 3 பிரிகேட்கள். இவையனைத்துமே நாச்சிக்குடாவுக்குத் தெற்காக, மேற்குக் கரையோரத்தில் இருந்து கிட்டத்தட்ட வன்னேரிக்கு கிழக்குப் பக்கம் வரை முன்னரங்க நிலைகளைக் கொண்டிருக்கின்றன.
11 ஆவது இலகு காலாற்படை, 12 ஆவது கஜபா றெஜிமென்ட், லெப். கேணல் லால் சந்திரசிறி தலைமையிலான 9 ஆவது கெமுனு வோச், லெப். கேணல் நந்தன துணுவில தலைமையிலான 12 ஆவது கெமுனு வோச், லெப். கேணல் கமால் பின்னவெல தலைமையிலான 6 ஆவது கெமுனு வோச், மேஜர் சமீர தலைமையிலான 10 ஆவது கஜபா றெஜிமென்ட், லெப். கேணல் சுமிந்த ஜெயசுந்தர தலைமையிலான 8 ஆவது கெமுனு வோச், மற்றும் 15 ஆவது கெமுனுவோச், 2 ஆவது கொமாண்டோ பற்றாலியன் என்று இதன் கீழ் உள்ள பற்றாலியன்களின் தொகை அதிகம்.
மன்னார் போர் அரங்கில் பெரும் இழப்புக்களைச் சந்தித்த இந்த டிவிசன் அடுத்த கட்டமாக நாச்சிக்குடாவைக் குறி வைத்திருப்பினும் அதை நேரிடையாகச் செய்ய முடியாதிருக்கிறது. இதனால் வன்னேரியை அடுத்த பண்டிவெட்டிக்குளம், கரம்பைக்குளம் பகுதிகள் ஊடாக முன்னகர்;ந்து மணியகுளம், கரியாலை நாகபடுவான், ஊடாக நாச்சிக்குடாவுக்குள் பின்புறமாகச் சென்று ஏறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் முயற்சி இது.
புலிகளின் வலுவான எதிர்த் தாக்குதல்களால் - பெருமளவு உயிரிழப்புக்களைச் சந்தித்து வரும் 57, 58 ஆவது டிவிசன்களில், நாளாந்தம் டசின் கணக்கானோர் காயமடைந்து வருவது முக்கியமான விடயம்.
பிரிகேடியர் பண்டார தலைமையிலான 62 ஆவது டிவிசன் கடைசியாக ஆரம்பிக்கப்பட்ட படைப்பிரிவாகும். இந்த டிவிசனில் இரண்டு பிரிகேட்கள் மட்டும் உள்ளன. பாலமோட்டை ,நவ்வி, மற்றும் அதற்கு கிழக்கு, மேற்கு பிரதேசங்களில் இதன் நகர்வுகள் இடம்பெறுகின்றன. ஏ-9 வீதியை மாங்குளத்துக்கும் ஓமந்தைக்கும் இடையில் குறுக்கறுத்துக் கைப்பற்றுவதே இதன் பிரதான திட்டம். ஆனால் புலிகளின் எதிர்ப்பினால் அதிகம் முடங்கிப் போயிருக்கின்ற படைப்பிரிவாக இதைக் கருதலாம்.
ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால் வன்னியின் மேற்குப் போர் அரங்கில் புலிகளுக்கு எதிராக வியூகம் வகுத்திருக்கின்ற குறைந்தது நான்கு டிவிசன்களிலும் உள்ள படையினரின் தொகை 30 ஆயிரத்துக்கும் குறையாமல் இருக்கும். பரந்துபட்ட பிரதேசத்தில், பெருமளவிலான படையினரைக் களம் இறக்கிப் புலிகளின் ஆளணி வளத்தையும், சூட்டு வலுவையும் பரவலாக்கிவிட்டு, சந்தர்ப்பம் வாய்க்கும் ஏதாவதொரு சிறிய இடைவெளிக்குள் புகுந்து பாரிய சேதத்தை ஏற்படுத்தலாம் என்று படைத்தரப்பு நம்புகிறது.
புலிகள் நாச்சிக்குடா வரைக்கும் மேற்கு கரையோரத்தாலும் மல்லாவி, துணுக்காய், அக்கராயன் என்று நடுப்பகுதியாலும் படையினரின் முன்னகர்வுக்கு நெகிழ்ந்து கொடுத்த காலம் இப்போது மாறி விட்டதென்றே சொல்லலாம். இப்போது தான் புலிகளின் மூர்க்கமான எதிர்ப்பையும் பெரும் இழப்புக்களையும் படையினர் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனாலும், இனிமேலும் விட்டுக் கொடுக்க முடியாத எல்லைக்குள் புலிகள்; பின் தள்ளப்பட்டு விட்டனர் என்பதில் சந்கேம் இல்லை. இந்தநிலையில் அடுத்து என்ன நிகழும் என்றோ, கிளிநொச்சியைப் புலிகள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்றோ அல்லது அதையும் கைவிட்டு விடுவார்கள் என்றோ எதிர்வு கூறுவது சாத்தியமானதல்ல.
ஆனால், ஒரு விடயத்தை இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டும். புலிகள் மீது போர் தொடுத்திருக்கின்றது ஒரு வல்லமை மிக்க அரசு. அதற்கு ஆயுதங்களைக் கொட்டிக் கொடுத்து முதுகில் தட்டிக் கொடுக்கின்ற கூட்டாளிகள் அதிகம் உள்ளனர். அதேவேளை புலிகளின் எதிர்த்; தாக்குதல் வலு என்பது தனியே ஆளணியோடு மட்டும் மதிப்பிடத்தக்கதல்ல.
அதற்கும் அப்பால் ஆயுதங்களும் மிக அவசியம். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சமரைப் புலிகள் நடத்தியிருக்கின்றனர். இந்தளவுக்கும் செலவிடப்பட்ட ஆயுதங்கள் எங்கிருந்து கிடைத்தன? அவை தொடர்ந்தும் கிடைப்பதற்கான வழிகள் உள்ளனவா? அப்படியான வழிகள் அடைபட்டுப் போனால் அடுத்து என்ன நடக்கும்? அதற்கான மாற்று வழிகள் உள்ளனவா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களே வன்னிப் போரின் அடுத்த கட்டத்தின் போக்கைத் தீர்மானிக்கப் போகிறது.
நன்றி: நிலவரம்
பின்னூட்டங்கள் (18)
...
...
இலங்கையில் போரை இந்தியாவால் நிறுத்த முடியும்
ஆதித்தமிழன் தோன்றிய பூர்வீக மண் இலங்கை:
...
...
...
...
...
...
Tamilnaadu Tamilleaders and tamilbrothers they want to help us the timeimg is start last partener sri lankenforces they have more wepons They are purchercing not for them ours too,before novmer27 we have more wepons dont worry our lieder got it.
...
cheers
thushanthan m




.jpg)












