அண்மைக் காலங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறித்து தமிழகத்தில் இன்று வளர்ந்துள்ள அரசியல் சிந்தனையானது அண்மைக் காலத் தமிழக வரலாற்றில் ஏற்படாத ஒன்றாகும்.

இலங்கைத் தமிழ் மக்களின் அண்மைக்கால அவலங்கள் குறித்து முதன் முதலில் குரல் கொடுத்த தமிழக அரசியல்வாதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த டீ.ராஜா ஆவார்.

இவருக்கு மத்திய சட்டவாக்கத்தில் ஒரு இடமுண்டு. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே இலங்கைத் தமிழர் பற்றிய அனுதாபகரமான பதில்க் குறிகளை வெளியிட்டு வந்துள்ளது.

நல்லகண்ணு, மகேந்திரன் முதலியோரின் குரல்கள் இவ்விடத்தில் ஒலித்தது பற்றி எமக்குத் தெரியும். அண்மையில் இலங்கையில் மன்னாரிலும் பின்னர் பூநகரி வழியாக வன்னிப் பிரதேசத்திலும் குண்டுமாரி வீசப்படத் தொடங்க தமிழ் மக்கள் பெரும் தொகையாக இடம்பெயரத் தொடங்கினர்.

இவர்களில் பலர் தோணி மார்க்கமாக தமிழகத்தைச் சென்றடைந்தார்கள், சென்றடைய முயன்றார்கள். இவ்வாறு செல்ல முயல்கின்றபோது பலர் இறந்தார்கள். சிலர் இடைநடுவில் கைவிடப்பட்டார்கள்.

இந்தத் தகவல்கள் தமிழகத்தில் பெரும் மனத்தளர்வை ஏற்படுத்தியன. கடலில் இலங்கைத் தமிழ் மக்கள் மரணிக்கிறார்கள் என்ற செய்தி தமிழகத்தின் குறிப்பாக தென் தமிழகத்தின் மனச்சாட்சியை உருத்தத் தொடங்கிற்று.

புவியியல் நிலையில் நின்று கூறினால் சேலம், கோயம்புத்தூர், திருச்சிக்குக் கீழே உள்ள தென் தமிழகம் இவ்விடயத்தில் முன்னணியில் நிற்பது வழக்கம். அத்தகையதொரு நிலைப்பாட்டின் வெளிப்பாடாகவே தமிழக அரசியலில் சில பதில்க் குறிகள் காணப்பட்டன.

"இலங்கைத் தமிழ் மக்களின் அவலம் தமிழகத்து மக்களின் இனத்துவ அனுதாபங்களைக் கிளறத்தொடங்க இந்தப் பிரச்சினையின் அரசியல் சற்று ஆழப்படத் தொடங்கியது" இலங்கைத் தமிழ் பிரச்சினையில் இன்றைய வடிவம் என்பது இன்றைய நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தோடு தொடர்புபட்டு நிற்பதாகும்.

விடுதலைப் புலிகள் என்ற பேச்சு வந்தவுடன் இந்திய அரசியலில் பேரலைகள் கிளம்பத் தொடங்குவது வழக்கம். அனைத்து இந்திய நிலையில் ராஜீவ்காந்தியின் கொலையோடு விடுதலைப் புலிகளுக்கு உரியதாக கூறப்படும் சம்பந்தம் அனைத்து இந்திய முக்கியத்துவம் உடையது.

அதாவது, இந்தியப் பிரதமராக இருந்து, அடுத்தும் அப்பதவிக்கு வரப்போவதாகவும் இருந்த ராஜீவ்காந்தியின் கொலை அனைத்து இந்திய முக்கியத்துவம் உடையது.

விடுதலைப் புலிகளை விரோத சக்தியாகவே இந்தியா பார்த்தது. அதுவும் சோனியாகாந்தியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடத்தும் நிலையில் விடுதலைப் புலிகள் பற்றிய பார்வை மிக இறுக்கமானதாகவே இருந்தது.

இதேவேளை, இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி உட்பட பல உதவிகளைச் செய்ய வேண்டிய ஒரு தென்னாசிய, தென்கிழக்காசிய, தூரகிழக்காசிய நிர்ப்பந்தம் ஒன்று இருந்தது.

சீனா, பாகிஸ்தானின் நல்லுறவுகள் இலங்கையில் பலப்படாவண்ணம் பார்க்க வேண்டிய ஒரு தேவை இருந்தது. இதனால் இந்திய மத்திய அரசின் சவுத் புளக் எனப்படும் இந்திய அந்நியநாட்டு அலுவலகம் இலங்கையில் விடுதலைப் புலிகளின் கிளர்ச்சிகளை மிக இறுக்கமாகவே பார்த்தது.

இந்த மத்திய அரசைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் கிளர்ச்சி பற்றி சிந்திக்கும்போது தமிழகம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

ஏனெனில் வட இலங்கையையும் தென்கிழக்கு கடற்கரையோர இந்தியாவும் (தமிழகம்) ஒரே மொழியினால், பண்பாட்டினால் இணைக்கப்பட்டனவாக இருந்தன. (இவை போதாதென்று இந்திராகாந்தி காலத்தில் தமிழ்க்குழுக்கள் பலவற்றுக்கு இந்தியாவிலேயே பயிற்சி வசதிகள் கிடைத்தது என்றும் கூறுவர்) இவற்றால் புதுடில்லி வடகிழக்கின் கிளர்ச்சியைப் பார்ப்பது எப்போதும் அனுதாபகரமாக இருந்ததில்லை. (இதற்கு சவுத் புளக்கின் மேல் உத்தியோகத்தர்கள் பலர் பிராமணர்களாக இருந்ததும் ஒரு காரணம் என்றும் சிலர் கூறுவதுண்டு) இலங்கை அரசு இந்த நிலைமையை நன்கு பயன்படுத்தியது.

இந்தியா ஆயுத உதவிகளைப் பெற்றுக் கொண்டது. இவ்வாறான காரணங்களால் இந்தியாவின் புதுடில்லி மையம் இலங்கைப் பிரச்சினையைப் பார்ப்பது எல்லா வேளைகளிலும் தமிழர் நிலைக்கு உதவுவதாக அமையவில்லை.

புதுடில்லி நிலைமை இவ்வாறிருக்க சென்னை அரசியலிலோ விடுதலைப் புலிகள் பற்றி இன்னொரு வகையான கருத்து விரிசல் காணப்படுகிறது. காலம் சென்ற எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு நிறைய உதவிகள் வழங்கினார் என்று கூறுவர். 40 கோடி ரூபாவுக்கு மேல் எம்.ஜி.ஆர். நிதியுதவிகூட வழங்கினார் என்ற பேச்சும் உலாவின.

அதுமாத்திரமல்லாமல் கருணாநிதியோடு உறவுகள் அத்தனை பலமாக இல்லை என்றும் பேசப்பட்டது. ஏனெனில், கருணாநிதி உதவ வந்த (ஒப்புநோக்கில்)சிறிய தொகையை வழங்க விடுதலைப் புலிகள் மறுத்ததாகவும் பேசப்பட்டது.

அது எம்.ஜி.ஆரைத் திருப்திப்படுத்தவும் என்றும் பேசப்பட்டது. இதனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி மட்டத்தில் கருத்துவேறுபாடு காணப்பட்டது.

ஆனால், வைகோ ஈழத் தமிழர் போராட்டம் பற்றி மிகவும் முனைப்பாக இருந்தவராவர். ஆனால், வைகோ தி.மு.கா.வை விட்டு விலகி ம.தி.மு.காவைத் தோற்றிவித்தது மாத்திரமல்லாது எம்.ஜி.ஆரின் வாரிசாக அ.தி.மு.காவின் தலைமையை ஏற்று மிக்க சாதுரியத்துடன் அதனை வழிநடத்திய ஜெயலலிதாவுடன் சேரவேண்டியதுமாயிற்று.

ஜெயலலிதா விடுதலைப் புலிகள் பற்றி நல்லபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. ஆனால், இப்பொழுதோ ராஜாவின் குரலைத் தொடர்ந்து ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழ் மக்களுக்கான தனது அனுதாபத்தை வெளியிட்டார். கலைஞருக்கு நிலைமை சற்று இக்கட்டானது.

கலைஞர் முதலில் இந்த விடயம் பற்றிப் பேசியதாவது, அவருக்கே இயல்பான வகையில் சுற்றிவளைத்துக் கூறுவதாகவே இருந்தது.

ஆனால், தமிழகம் இந்த விடயத்தில் கருணாநிதியின் சொற் சாதுரிய வீச்சை ஏற்றுக்கொள்ளவே இல்லை. தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது.

கருணாநிதி தனது நிலைப்பாட்டை மாற்றினார். மத்திய அரசு இந்த விடயத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். (இக்கட்டத்தில் மத்திய ஆட்சியில் காங்கிரஸுக்கு ஆதரவு வழங்கும் தி.மு.கா.வுக்கு 40 எம்.பிக்கள் உள்ளனர் என்பதை மறந்துவிடக் கூடாது) உண்மையில் தமிழகத்தில் மேற்கிளம்பும் அனுதாப அலையானது மக்கள் நிலைப்பட்டதாகும்.

இந்த உண்மையை நாடிபார்த்துப் பிடித்துக் கொண்ட ஜெயலலிதா விடுதலைப் புலிகளைத் திசைமாறிப் போன ஆயுதபுரட்சி என்று கூறினாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே பேசத் தொடங்கினார். கருணாநிதி ஒரு புதிய சூழ்நிலையை எதிர்நோக்கினார்.

தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை தானே முன்னின்று கூறுவதற்கான ஒருவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினார். அதனாலேயே எதிர்வரும் 14ஆம் திகதியன்று சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பினை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை என்று இன்றைய செய்திகள் கூறினாலும் இவர்கள் யாவருமே ஒட்டுமொத்தமாகக் கிளம்பும் தமிழக மன எழுச்சியை கௌரவிக்கவேண்டிய தேவை உள்ளதென்பதை மறுத்துவிட முடியாது.

தமிழகத்தில் இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்த முரண்பாடுகள் குறிப்பாக, கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை டில்லியில் எதிர் ஒலிக்காமல் இல்லை. இலங்கைத் தூதுவர் அழைத்துப் பேசப்பட்டார். கொழும்பிலும் ஜனாதிபதி இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்துடன் நீண்டநேர ஆலோசனைகள் நடத்தினார் என்று செய்திகள் வெளிவந்தன.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது தமிழக - ஈழத் தமிழர் அரசியல் அனுதாபப் போக்குகள் பற்றி பின்வரும் உண்மையை பதிவுசெய்யவேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் வடக்குக் கிழக்கில் நடைபெறும் யுத்தம் பற்றியும் யுத்த நடவடிக்கைகள் பற்றியும் எல்லா வேளைகளிலும் தமிழகத்தில் வெட்ட வெளிச்சமாக அனுதாபம் செய்யப்படுவதில்லை.

சிரத்தை இல்லாமல் இல்லை, ஆனால் அதற்கு மேல் இல்லை. இலங்கைத் தமிழ் அகதிகளை தமிழ்நாடு நன்கு கவனிக்கவே செய்கிறது. ஆனால், இவையாவற்றுக்கும் மேலாக இலங்கை தமிழ் மக்களின் ஈனக் குரல்கள் மேலோங்க, மேலோங்க குறிப்பாக, இலங்கையில் இருந்து வரும் அகதிகள் மூழ்கி இறக்கிறார்கள், சிரமப்படுகிறார்கள் என்பது தெரியவரும்போது நிச்சயமான ஒரு அனுதாப அலை ஏற்படவே செய்கின்றது.

இது ஓரளவுக்கு அடிநிலைப்பட்ட மன எழுச்சி ஆகும். இம்முறை அரசியல் கட்சிகள் எடுத்துப் பேசவேண்டியளவுக்கு விடயம் பெருத்துள்ளது. ஆனால், இலங்கைத் தமிழர் நிலை பற்றி தமிழக மக்களுக்கு இப்படியான திடீர் வெடிப்புகள் ஏற்படும்போது அல்லாது சாதாரண (யுத்த)காலத்து நிலைமைகள் தெரியவருவதேயில்லை.

அத்துடன் இலங்கையில் இருந்து சென்ற அகதிகளில் பெரும்பாலானவர்களின் நடவடிக்கைகள் இதற்கு உதவுவதாகவும் இல்லை. இருப்பினும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பெரிதாகப் பெரிதாக தமிழகத்தின் உஷ்ணமானி அதைக் காட்டத்தவறுவதேயில்லை.

இதனாலேயே கலைஞர் அவர்கள் முதலில் சுற்றிவளைத்து சொற்சிலம்பம் ஆட விரும்பினார் என்றாலும் இப்போது 14 ஆம் திகதி சர்வகட்சி மாநாட்டைக் கூட்டவேண்டிய நிலையில் உள்ளார்.

ஜெயலலிதா வராமல் விடலாம். ஆனால், புதுடில்லி இதனைத் தொடர்ந்து கவனிக்காமல் இருக்க முடியாது. மீளநோக்கும்போது இலங்கைத் தமிழர் அரசியல் அவலங்களை தமிழக மக்களிடையே சரிவர எடுத்துக் கூறுவதற்கான ஒழுங்கமைப்பு இப்பொழுது இல்லை என்பதை ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

நன்றி-தினக்குரல்
 

பின்னூட்டங்கள் (0)

Subscribe to this comment's feed

சிறிது | பெரிது

busy
 
கட்டுரைகள்