இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகெங்கும் வாழும் சுமார் பத்துக்கோடி தமிழர்களில் ஏறத்தாழ ஆறரைக் கோடி தமிழர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்கு இடர் சூழும் போதெல்லாம் அதிலிருந்து மீள தமிழகத்தையே எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய கடமை தமிழகத்திற்கு உண்டு. மியான்மர் முதல் பிலிப்பைன்ஸ் வரை உள்ள தென் கிழக்கு ஆசிய நாடுகள் எல்லாவற்றிலும் சீனர்கள் பெருந்தொகையாக வாழ்கிறார்கள்.
அவர்களின் நலனில் செஞ்சீனம் மிகுந்த அக்கறைக் கொண்டிருக்கிறது. எனவே இந்நாடுகளில் அவர்களுக்கு எதிராக சுண்டுவிரலை அசைப்பதற்கு கூட மற்ற இனத்தவர்கள் அஞ்சுகிறார்கள். உலகத் தமிழர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையைத் செய்திருக்கிறதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக் கொள்வது நல்லது.
இலங்கையில் மிக அண்மையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவ வெறியர்களினால் கொல்லப்பட்டார்கள். அதைத் தடுப்பதற்கு குரல் கொடுக்க வேண்டிய தமிழகம் அந்த கடைமையை முழுமையாக செய்யவில்லை. இந்த இரங்கத்தக்க நிலை இன்னமும் தொடர்கிறது.
சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா உடன்பாட்டில் உள்ள போர் விதிமுறைகள் ஆகியவற்றை முற்றிலுமாக மீறி ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து ஓர் இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்தியுள்ளது. இது மனித உரிமையை மீறிய செயலாகும். எனவே இலங்கை அரசின் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி மத்திய அரசை வலியுறுத்த வேண்டியது தமிழக மக்களின் கடமை.
கட்சி எல்லைக்கோடுகளுக்கு அப்பால் அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். லட்சக்கணக்கானத் தமிழர்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்த வேண்டியது தமிழனாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகும். ஆனால், அந்தக் கடமையை மறந்தும் துறந்தும் செயலாற்றுவது தமிழினத்திற்கு இழைக்கப்படுகிற துரோகமாகும்.
திட்டமிட்ட இனப்படுகொலையை சர்வதேச சமுதாயம் மிகக் கடுமையாக கண்டித்துள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அத்தனை அழிவுகளுக்கும் காரணமான ஜெர்மானியத் தலைவர்களை போர்க் குற்றவாளியாக்கி விசாரணை செய்ய நூரம்பர்க் எனும் நகரில் விசாரணை நீதிமன்றமும் ஜப்பானியப் போர்க் குற்றவாளிகளை விசாரிக்க டோக்கியோவில் விசாரணை நீதிமன்றமும் அமைக்கப்பட்டன. இந்த நீதிமன்றங்கள் வகுத்த வரைமுறைகளிலும் ஐ.நா. பேரவை நிறைவேற்றியத் தீர்மானங்களிலும் 1948ஆம் ஆண்டு இனப்படுகொலையைத் தடுப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்குமான மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் இன்று வரையிலும் இப்பிரச்சனையில் உலக நாடுகளுக்கு வழிகாட்டி வருகின்றன.
இரண்டாம் உலகப் போரின்போது கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ ஒரு கோடியே இருபது லட்சம் சிலேவிய, யூத இனங்களைச் சேர்ந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆட்சியின் போது கருப்பினத்தை சேர்ந்த நீக்ரோ மக்களும் இந்திய மக்களும் இனப்படுகொலைக்கு ஆளானார்கள். இஸ்ரேல் ஆக்கிரமித்தப் பகுதிகளில் இருந்த எண்ணற்ற அரேபிய மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாயினர். வியட்நாமில் அமெரிக்கப் படையினர் வியட்நாம் மக்களை இனப்படுகொலை செய்தனர். சீனா திபெத்திய மக்களைக் கொன்று குவித்தது. பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானை சேர்ந்த வங்க இன மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிற்று.
அதைப் போல இலங்கையில் தமிழ் மக்கள் சிங்கள இராணுவ வெறியர்களால் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள். உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் இத்தகைய இனப்படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காகவும், குற்றவாளிகளை தண்டிப்பதற்காகவும் சர்வதேச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டு ஐ.நா இதை அமைத்தது.
ஐ.நா.வின் பட்டயத்தில் இந்த அமைப்புக் குறித்தும்,அதன் அதிகார வரம்புக் குறித்தும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஐ.நா. பேரவையும் பாதுகாப்புக் குழுவும் கூடி சர்வதேச நீதிமன்றத்திற்குரிய 15 நீதிபதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் நாடுகளை சேர்ந்தவர்களாக இவர்கள் இதில் இடம் பெற முடியாது. இந்த நீதிமன்றம் நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹெக் நகரில் இயங்கும்.
1990ஆம் ஆண்டில் போஸ்னியாவின் கிழக்குப் பகுதியில் வாழும் சுமார் 40இ000க்கு மேற்பட்ட போஸ்னியா செர்பிய இராணுவம் திட்டமிட்ட இனப்படுகொலை செய்தது என்ற குற்றச்சாற்றின் அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. யூகோ சிலேவியா, செர்பியா ஆகியவற்றின் முன்னாள் அதிபரான சுலோ போடன் மிலோசெவிக் மற்றும் முக்கியமான 30 பேர்கள் மீது இந்த வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த இடைக்காலத்தில் மிலோசெவிக் இயற்கையாக மரணம் அடைந்தார்.
2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி சர்வதேச நீதிமன்றம் போஸ்னிய இனப்படுகொலை வழக்கில் திட்டமிட்ட இனப்படுகொலை நடைபெற்றிருக்கிறது எனத் தீர்ப்பு அளித்தது. மேலும் இவ்வழக்கில் பலர் தண்டிக்கப்பட்டனர். சிலர் விடுதலையாயினர். 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ஐ.நா பேரவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 47/121 இன் படி இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையும் இனப்படுகொலையேயாகும். இந்த தீர்மானத்தின்படி போஸ்னியாவில் செர்பியர்கள் நடத்திய இனப்படுகொலை கண்டிக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி அமெரிக்கப் பிரதிநிதிகள் அவை போஸ்னியாவில் நடைபெற்ற இனப்படுகொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. எனவே, ஐ.நா பேரவை அமெரிக்க பிரதிநிதிகள் அவை, சர்வதேச நீதிமன்றம் போன்ற அமைப்புகள் இனப்படுகொலையை மிகக் கடுமையாக கண்டித்துள்ளன. அதன் அடிப்படையில் தமிழகமும் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்ற வேண்டியது இன்றியமையாததாகும்.
உற்றார் உறவினர் பெற்றோர் பிள்ளைகள் எல்லோரையும் இழந்து சாவின் விளிம்பில் நின்று தத்தளித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு இத்தகைய முயற்சி நம்பிக்கைக் கீற்றாக விளங்கும்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை படுகொலை செய்த கொலைக்கார கும்பலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக் கொடுக்க முயலும் என்பதை நிலை நிறுத்த வேண்டும். கட்சி வேறுபாடின்றி தமிழர் என்ற உணர்வுடன் அனைவரும் ஒன்றுபட்டு மத்திய அரசை இதற்காக வலியுறுத்த வேண்டும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





