இலங்கையின் நீதித் துறை முறைமை, சட்டத் தொழிற்றுறை மற்றும் ஊடகங்களின் நிலைமை என்பவற்றுக்கான அச்சுறுத்தல் குறித்து சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனம் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கையின் விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்த இந்த நிறுவனம் மனித உரிமைகள் சட்டத்தரணிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் முறைமை என்பன கிரமமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை சிவில் சமூக உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு உள்ளதுடன் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராகவும் இவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகளை விமர்சிப்பவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஊகிக்கப்படுகின்றது என்று சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை லண்டனில் வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட மனித உரிமைகள் சட்டத்தரணியும் ஊழல் மோசடிக்கு எதிரான பிரசாரகருமான ஜேசி வெலியமுன கூறுகையில்;
உள்மட்டத்திலும் வெளிமட்டத்திலும் இருந்து அச்சுறுத்தல்கள் காணப்படுவதாக கூறியுள்ளார். கடந்த ஆண்டில் பிற்பகுதியில் அவரின் வீட்டின் மீது கிரனைய்ட் வீச்சு இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதல் நடத்தியவர் தொடர்பான விசாரணையில் சிறிதளவே முன்னேற்றம் அடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அரசியல் தீர்வுத் தலைவர்களினால் இந்தச் சம்பவங்கள் எவையும் உரிய முறையில் விசாரணை செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்ததாக பி.பி.சி.யின் சிங்களச் சேவை குறிப்பிட்டுள்ளது.
இக்குற்றச்சாட்டை ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நிராகரித்துள்ளார். தாமதத்திற்குக் காரணங்கள் உள்ளன. உதாரணமாக தாக்குதல் நடத்தியோரின் கையடக்கத் தொலைபேசியின் பதிவுகளைக் கண்டு பிடிப்பதே கடினமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேண்டுமென்றே இந்த விசாரணைகளை தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கம் அரசாங்கத்திடம் கிடையாது. பத்திரிகையாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் தலையிடுகின்றது என்பதையும் நான் நிராகரிக்கின்றேன் என்றும் அமைச்சர் யாப்பா கூறியுள்ளார்.
"இலங்கையிலுள்ள சட்டத்தரணிகள் தமது தொழில்சார் கடைமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்கப்படுவது அவசியமானதாகும். அச்சமோ தாக்குதல்களோ இன்றி அவர்கள் தமது கடமையை மேற்கொள்ள அனுமதிப்பது அவசியமானதாகவோ பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு ஆதரவாக ஆஜராகும் தனிப்பட்ட வழக்கறிஞர்களை பெயர் குறிப்பிடுவது முற்றிலும் பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.
அத்துடன், இதனால், அவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கிறது என்று சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் மனித உரிமைகள் குழுவின் தலைவரும் பிரிட்டனின் முன்னணி வழக்கறிஞருமான குட்காட் பிரபு கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள ஜனநாயக நிறுவனங்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் குறைவாக இருக்கும் அபாயகரமான நிலைமை காணப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளர் ரோஹான் எதிரிசிங்க கூறியுள்ளார். 1972 ஆம் ஆண்டு அரசியல் அமைப்புடன் இந்தச் சரிவு ஆரம்பமானது. அக்காலம் தொடக்கம் நிறைவேற்று அதிகாரத்துடன் நீதித்துறை மிகவும் நெருக்கமாகச் செல்வதற்கு ஆரம்பித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு முறைமைகளை ஸ்தாபிப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நாட்டை விட்டு வெளியேறி சாட்சிகள் செய்மதி சாட்சியங்கள் மூலம் சாட்சியமளிக்க முடியும் என்று சர்வதேச மாண்பு மிக்கோர் சுயாதீனக் குழு சிபாரிசு செய்திருந்தது.
ஆயினும், சாட்சிகள் எங்கே உள்ளனர் என்று கண்டுபிடிக்க அதிகாரிகள் இந்த முறைமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டதாக லண்டனில் இடம்பெற்ற கூட்டத்தில் சர்வதேச மாண்பு மிக்கோர் சுயாதீனக் குழுவின் முன்னாள் உறுப்பினரான சேர் மைக்கேல் ரோட்லி தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்கஇ நீதித்துறையை அரசியல் மயமற்றதாக்க வேண்டிய நடவடிக்கையை புதிய பிரதம நீதியரசர் மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பை சர்வதேச சட்டத்துறை நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் என்றும் ஏனெனில், இச்சட்டத்தில் சில பகுதிகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற் பட்டவையாக உள்ளதாகவும் அவர்கள் அழைப்பு விடுத்ததுடன் அவசரகால ஒழுங்கு விதிகளையும் படிப்படியாக நீக்க வேண்டுமென அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இது சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் என்றும் உண்மை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அரசாங்கம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் குட்காட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்குப் பொறுப்பாக ஆணைக்குழு இருக்குமாயின் அது மிகவும் முக்கியமானது என நான் கருதுகிறேன் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து ஆலோசனையை ஏற்றுக் கொள்வதை நாடுகள் தயக்கம் காட்டுவதை விளங்கிக் கொள்ள முடியும். ஆனால், சர்வதேச குழுக்களிடமிருந்து ஆதாரத்தைப் பெற்றுக் கொள்வதையும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வதும் மிகவும் முக்கியமானது' என்றும் குட்காட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
எவ்வாறெனினும், இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை உறுப்பினர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. நல்லிணக்கத்தை மேற்கொள்ள ஆணைக்குழுவொன்றை இலங்கை அதிகாரிகள் நியமிப்பார்கள் என்று தான் எதிர்பார்க்கவில்லையென வெளியமுன கூறியுள்ளார்.
இது இலங்கைக்குப் பாரிய சவாலாகும். ஆனால், இது தொடர்பாக தற்போதைய தருணத்தில் அரசியல் தலைமைத்துவத்திடமிருந்து இத்தகைய நடவடிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் ஏதாவது ஈடுபாட்டை நான் காணவில்லை என்றும் பி.பி.சி.க்கு வெளியமுன கூறியுள்ளார்.
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்
- இந்திய இராணுவத் தளபதி நாளை மறுதினம் இலங்கையில்
- அமைச்சர் பீரிஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்




.jpg)







.jpg)





