கடுமையாக நோய்வாய்ப்பட்ட இரண்டு சிறுவர்களை வவுனியா அரச மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு படையினர் மறுத்ததால் குறிப்பிட இரண்டு சிறுவர்களும் பரிதாபகரமாக மரணமடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
போதிய மருத்துவ வசதிகள் முகாம்களில் செய்துகொடுக்கப்படாத அதேவேளையில், வவுனியா அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் செல்வதற்கும் நோயாளர்களுக்குப் பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா முகாம்களில் காணப்படும் சுகாதாரச் சீர்கேடுகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்ற அதேவேளையில், நோய் வாய்ப்படும் அகதிகளைப் பராமரிப்பதிலும் அவர்களுக்கான மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் படையினரின் கெடுபிடிகளால் பாதிக்கப்படும் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கெடுபிடிகளால் மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலேயே பலர் இருப்பதாக தெரியவந்திருக்கின்றது.
முகாமில் உள்ளவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுகின்ற போதிலும்இ இவர்களை வெளிநோயாளர்களாகப் பார்வையிடுவதற்கு ஒரு சில மருத்துவர்கள் மட்டுமே செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட வரிசையில் மருத்துவ சிகிச்சைக்காகக் காத்திருக்கும் அக்களை இவர்கள் ஒவ்வொருவராக அழைத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற போது இராணுவப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த ஒருவரும் இவை அனைத்தையும் மிகவும் அருகில் இருந்தே அவதானித்துக் கொண்டிருப்பதால் நோயாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுகின்றது.
மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நோயாளி ஒருவருக்கு மேலதிக சிகிச்சை தேவை என அல்லது அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவர் கருதினால், குறிப்பிட்ட நோயாளிக்கு 'இடமாற்றப் பத்திரம்' ஒன்றை வழங்கி குறிப்பிட்ட முகாமின் மருத்துவ இணைப்பாளரிடம் அனுப்பிவைப்பார்.
இவ்வாறு இடமாற்றப் பத்திரத்துடன் வரும் ஒரு நோயாளியை வவுனியா அரசினர் மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதா இல்லையா என்பதை குறிப்பிட்ட மருத்துவ இணைப்பாளரே தீர்மானிப்பார். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
இந்த மருத்துவ இணைப்பாளர்கள் சிங்களவர்களாக இருப்பதுடன், மருத்துவக் கல்வியை முடித்துவிட்டு நியமனத்துக்காகக் காத்திருக்கும் அனுபவமற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். மருத்துவர்களின் இடமாற்றக் கோரிக்கையை இவர்கள் பெரும்பாலும் நிராகரித்துவிடுவதாகக் கூறப்படுகின்றது. இராணுவ அதிகாரிகளும் இவ்வாறு வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை முடிந்தளவுக்குக் குறைக்குமாறே இவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதேவேளையில் இந்த மருத்துவ இணைப்பாளர்கள் இடமாற்ற அனுமதியை வழங்குவதற்காக அகதிகளிடம் 500 ரூபா முதல் 1,000 ரூபா வரையில் கையூட்டாகப் பெற்றுக்கொள்வதாகவும் நோயளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்ட பின்னர் நோயாளர் காவு வாகனம் மூலமாக அல்லது பேருந்துகள் மூலமாக இவர்கள் வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படுகின்றனர். வவுனியாவுக்குச் செல்லும் பாதையில் பிரதான இராணுவச் சோதனைச் சாவடி ஒன்றுள்ளது.
இந்த இராணுவச் சோதனைச் சாவடியில் இராணுவ மருத்துவர் ஒருவரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். வவுனியாவுக்கு கொண்டுசெல்லப்படும் நோயாளர்களை அவர் அங்கு வைத்து மீள் பரிசோதனைக்கு உட்படுத்துவார். உண்மையில் அவர் போதிய மருத்துவ அறிவைக்கொண்டவர் அல்ல. குறிப்பிட்ட நோயளர்களை வவுனியாவுக்குக் கொண்டுசெல்வதா இல்லையா என்பதையிட்டு அவர்தான் இறுதி முடிவை எடுப்பார். மருத்துவ இணைப்பாளரின் உத்தரவை நிராகரித்து நோயாளி ஒருவரை திருப்பி அனுப்புவதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.
நிமோனியாவினால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களை வவுனியா மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான மருத்துவ இணைப்பாளரின் உத்தரவுடன் கடந்த மாத தொடக்கத்தில் இந்தப் பகுதியால் கொண்டு செல்லப்பட்டபோது குறிப்பிட்ட இராணுவ மருத்துவரால் 'மீள் பரிசோதனைக்கு' உட்படுத்தப்பட்டனர். பரிசோதனையின் பின்னர் அவர்களை வவுனியாவுக்குக் கொண்டுசெல்லத் தேவை இல்லை எனத் தீர்ப்பளித்த குறிப்பிட்ட மருத்துவர், அவர்களை முகாமுக்குத் திருப்பிக்கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டார்.
மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இந்த இரு சிறுவர்களும் முகாமுக்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்ட பின்னர் பரிதாபகரமாக மரணமடைந்தனர். இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்ற பின்னரும் முகாமில் உள்ளவர்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான நடைமுறைகள் மாற்றப்படவில்லை.
- இங்கிலாந்து ஹரே கிருஷ்ணா ஆலயத்தில் தீ விபத்து
- இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்
- மதுரங்குளி விபத்தில் ஒருவர் பலி
- யாழ். வீதி விபத்தில் இளைஞர் பலி
- யாழ்ப்பாணத்தில் வீதி விபத்து; நால்வர் படுகாயம்
- கட்சிக்கு எதிராக செயற்படுவோருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
- பாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 43 பேர் பலி
- ஐ.தே.க.வின் இரு எம்.பிக்கள் அரசுக்கு ஆதரவு
- வாகரையில் ஆயுதங்கள் மீட்பு
- மேய்ச்சலுக்கென ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறிய விவசாயம் மேற்கொள்ளப்படுவதாக புகார்




.jpg)






.jpg)





